கோவை: தமிழகம் முழுவதும் நியாயவிலைக்கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மலேசியா, இந்தோனேசியா வியாபாரிகள் பலன் பெறுவதற்காகத் தமிழக மக்களின் வரிப்பணத்தில் ரூ.200 கோடி செலவு செய்து பாமாயில் இறக்குமதி செய்வது நியாயமா எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இதனிடையே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடத்தும் 'தென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு' வரும் 14ஆம் தேதி பொள்ளாச்சி அருகே உள்ள செஞ்சேரிமலையில் நடைபெறவுள்ளது.
தென்னை விவசாயிகள் கோரிக்கை: கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் இச்சங்கத்தினர் இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.11) நடந்தது. அப்போது செய்தியாளர்களிடையே பேசிய அச்சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, 'கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரியும், தென்னை விவசாயிகளின் இன்னும் பல கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையிலும் தென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு நடத்தப்படவுள்ளது.
இதனிடையே அந்த மாநாட்டுக்கு முன்னதாகவே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் விடுத்துள்ள வேண்டுகோளில், நியாயவிலைக்கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என அரசுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்துணவு திட்டத்தில் பாமாயில் பதிலாக தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.
கள்ளுக்கான தடையை அகற்றுக: இதேபோல் உலக அளவிலும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கள்ளுக்கு தடை இல்லை என்றும் தமிழகத்தில் மட்டும் ஏன் தடை போடப்பட்டுள்ளது எனவும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசு 12 சாரா ஆலை அதிபர்களுக்காக இந்த தடையை போட்டிருக்கிறதா? என ஆராய்ந்த அந்த அமைப்பு கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
கள்ளுக்கான தடையை நீக்கும் விவகாரத்தில் அரசு எந்த காலதாமதமும் செய்யாமல் கேரளாவை போல், கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இதேபோல் கிசான் ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசுக்கு முன் வைக்கப்பட்டுள்ளது. கொப்பரை தேங்காய் விலையை பொறுத்தவரை மத்திய அரசு கொடுக்கும் விலை கட்டுப்படியாகவில்லை எனத் தெரிவித்துள்ளது.
ரேசன் கடையில் பனைப்பொருட்கள்: தமிழக நியாயவிலைக்கடைகளில் பனைப்பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சத்துணவு திட்டத்தில் பாமாயில் பதிலாக தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க: எம்.பி.யை எட்டி உதைத்த மாடு... தொட்டு கும்பிட வந்தது குத்தமா...