கோயம்புத்தூர்: பொள்ளாச்சி (Pollachi) அடுத்த ஆழியாறு ஆற்றிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு 500 கோடி ரூபாயில் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு அண்மையில் தமிழ்நாடு அரசு ஆணை (Government order) வெளியிட்டது. இதனைக் கண்டித்து 500க்கும் மேற்பட்ட ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு விவசாயிகள் வேட்டைக்காரன் புதூரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (நவ.23) போராட்டம் நடத்தினர்.
அப்போது, "ஆழியாறு ஆற்றிலிருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றாததால் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம், நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு நீர் கொண்டு சென்றால் இங்குள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.
ஆழியாறு பாசன விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சர்க்கார்பதி முதல் நல்லாறு வரையிலான இயற்கையாக வரும் நீரோடைகள் காண்டூர் கால்வாயில் திருப்பி விடப்பட்டுள்ளது, இதை முன்பு இருந்ததைப் போல மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு கனமழை