கோயம்புத்தூர்: கோவை அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் முகமது ஹனீபா என்பவர் பேருந்துக்காக காத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று நபர்கள், முகமது ஹனீபாவிடம் மெதுவாக பேச்சு கொடுக்கத்தொடங்கி உள்ளனர். அப்போது அவர்கள் தங்களிடம் 3 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் உள்ளதாகவும், அது அச்சு அசலாக உண்மையான பண நோட்டுகளைப் போலவே இருக்கும் எனவும் கூறியது மட்டுமல்லாமல், அதுதொடர்பாக அவர்களது செல்போனில் இருந்த ஒரு வீடியோ ஆதாரத்தையும் காண்பித்துள்ளனர்.
மேலும் ஒரு லட்சம் ரூபாய் உண்மையான பணத்தை தங்களிடம் கொடுத்தால், மூன்று லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளைத் தருவதாகவும், அதனை வைத்து பல்வேறு பொருட்களை வாங்கித் தாராளமாக செலவு செய்யலாம் எனவும்; அவர்கள் ஹனீபாவிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி உள்ளனர். இதனையடுத்து முகமது ஹனீபா, அவர்களை பேருந்து நிறுத்தத்திலேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு, வீட்டுக்குச்சென்று ஒரு லட்சம் ரூபாயை எடுத்து வருவதாகவும், பின்னர் அந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை 3 பேரிடம் கொடுத்துவிட்டு, 3 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளைப் பெற்றுச்செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, கள்ளநோட்டு கும்பல் பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்துள்ளது. ஆனால், முகமது ஹனீபாவோ தனது வீட்டுக்குச் செல்லாமல், அருகில் உள்ள ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்திற்குச்சென்று நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்குச்சென்ற காவல் துறையினர், மூவரும் அங்கு நின்று கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளனர். பின்னர் அவர்களை பிடிக்க முயன்றபோது, அவர்கள் அங்கிருந்து தப்ப முயற்சி செய்துள்ளனர்.
இருப்பினும், அவர்கள் மூன்று பேரையும் சுற்றி வளைத்த காவல் துறையினர், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பிடிபட்ட நபர்கள் கோவை மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத், கலைவாசன் மற்றும் சண்முக பிரசாத் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர்களிடம் கள்ள நோட்டுகள் எதுவும் இல்லை என்பதும், இவர்கள் இந்த வீடியோவை காண்பித்து ஆசை வார்த்தைக் கூறி முகமது ஹனீபாவிடம் இருந்து 1 லட்சம் ரூபாயை ஏமாற்றிச்செல்ல திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்கள் ஓட்டி வந்த காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் இதுபோன்று ஆசை வார்த்தைகளைக் கூறியும், அவர்களிடம் ஏமாறாமல் உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்து, அவர்களைப் பிடிக்க உதவியாக இருந்த முகமது ஹனீபாவை காவல் துறையினர் பாராட்டினர். மேலும் இது போன்றவர்கள் யாரேனும் ஆசை வார்த்தைகள் கூறினால் பொதுமக்கள் ஏமாறக் கூடாது எனவும், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்குமாறும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கடன் வாங்கித் தருவதாக கேரள தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி - ஊராட்சி மன்றத் தலைவர் வீடுகளில் ரெய்டு!