கோயம்புத்தூர்: சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வண்ணம் அரசு மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘டிராப் என் டிரா’ (Drop 'N' Draw) என்ற தனியார் நிறுவனம் லேடீஸ் சர்க்கிள் உதவியுடன் கோவை ரயில் நிலையத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு முகக்கவசம் வழங்கும் வெண்டிங் இயந்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் 3ஆவது நடைமேடையில் இந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் முகக்கவசம் எடுத்துக்கொள்ளலாம் அல்லது உடல் எடையை பார்த்துக்கொள்ளலாம். இந்த இயந்திரத்தில் போடப்படும் பாட்டில்கள் மறுசுழற்சி முறைக்கு உட்படுத்தப்படும். இந்த இயந்திரத்தை பொதுமக்கள் பலரும் உபயோகப்படுத்தி வருகின்றனர்.
மக்கள் பலரும் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை குப்பைத்தொட்டிகளில் போடுவதற்குப் பதிலாக இந்த இயந்திரத்தில் போட்டு முகக்கவசம் எடுத்துக்கொள்கின்றனர்.
இதுகுறித்து பேசிய ரஞ்சித் என்ற பயணி, “இது ஒரு நல்ல முயற்சி. இந்த கரோனா காலத்தில் உபயோகப்படுத்திய பாட்டில்களைக்கொண்டு முகக்கவசம் எடுத்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
பாட்டில்களை மறுசுழற்சி முறைக்கு உட்படுத்துவதும் மிக சிறந்ததாக உள்ளது. இதனைப் பேருந்து நிலையங்கள் போன்று மக்கள் கூடும் பகுதிகளில் நிறுவ வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய தனியார் ஊழியர் பரணிதரன், “இந்த இயந்திரம் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரம். ஒரு பாட்டிலை போட்டால் ஒரு முகக்கவசம் எடுத்துக்கொள்ளலாம் அல்லது உடல் எடையைப் பார்த்துக் கொள்ளலாம். இதனையடுத்து 'மஞ்சப்பை' தரும் இயந்திரத்தை தயாரிக்க உள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: கருவில் இருக்கும் குழந்தையைத் தத்தெடுக்கக்கூடாது - பஞ்சாப், ஹரியானா நீதிமன்றங்கள் அறிவிப்பு!