கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதோடு பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழந்த காரணத்தால் அந்த பதவிக்கும் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கிறது.
அதிமுக சார்பில் சரோஜினி என்பவர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று (செப்.26) முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி திவான்சாபுதூர், கணபதிபாளையம், பூச்சனாரி பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அதிமுகவினர் மீது பொய் வழக்குகள்
அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வருவதற்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வால் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வு ரத்து, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 எனப் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.
மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து திமுக மிரட்டுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் வந்த நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம். சட்டப்படி வழக்குகளை சந்திப்போம்" என்றார்.
வால்பாறை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அமுல் கந்தசாமி, ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் அப்புசாமி, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையில் பயங்கர முரண்பாடு - அண்ணாமலை