மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்பு தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம், தபெதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் எவிடன்ஸ் கதிர் செய்தியாளர்களிடம் பேசுகையில், '' மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழக்கக் காரணமான சுவர், தீண்டாமை சுவர் தான். இது அப்பட்டமான சாதியப் படுகொலை. இந்தச் சுவர் தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
17 பேர் உயிரிழக்க அரசின் அலட்சியமே காரணம். அமைதியாகப் போராட்டம் நடத்திய தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை. திருவள்ளுவன் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் உள்நோக்கத்தோடு தடியடி நடத்தியுள்ளனர். ஆனால், தடியடி நடத்தவில்லை என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகிறார். இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளி அரசு நிர்வாகம், இரண்டாவது குற்றவாளி சிவசுப்பிரமணியம், மூன்றாவது குற்றவாளி போராட்டக்காரர்களை தாக்கிய காவல் துறையினர்.
சாதியப் பெயரை சொல்லி இழிவாக பேசிய டிஎஸ்பி மணி மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் உடலை மழையில் போட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவசுப்பிரமணியம் மீது எஸ்.சி, எஸ்.டி., பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள தீண்டாமைச் சுவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க:
தீண்டாமைச் சுவர்களை அகற்றுங்கள் - மதுரையில் மனு அளித்த ஆதித்தமிழர் கட்சியினர்