கோயம்புத்தூர்: ஊருக்குள் நுழைவதால் தாறுமாறாக தாக்கப்படும் பாகுபலி யானையின் இடது கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளதால் விரைவில் சிகிச்சை அளிக்க சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானையின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
ஆண்டில் ஒரு சில மாதங்கள் மட்டும் அடர்ந்த காட்டுக்குள் சென்று விடும் இந்த யானை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைவதும், விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாக கொண்டுள்ளது. யானையின் பிரமாண்ட உருவம் காரணமாக பாகுபலி என்று அழைக்கப்படும் இந்த யானைக்கு ரேடியோ காலர் கருவி பொறுத்தி கண்காணிக்க முடிவு செய்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் வனத்துறையினர் முயன்ற நிலையில், ரேடியோ காலர் கருவி பொறுத்தும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
ஆண்டுக்கணக்கில் மேட்டுப்பாளையம் பகுதியில் இந்த யானை சுற்றி வந்தாலும் இதுவரை இந்த யானை யாரையும் தாக்கவோ அல்லது அச்சுறுத்துவதைக்கூடத் தவிர்த்து தான் வந்த வேலையான வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை உண்டு விட்டு சென்று விடும். தன்னை துன்புறுத்தி விரட்ட முயல்பவர்களைக் கூட பாகுபலி யானை தாக்க முற்படாமல் கடந்து செல்வது இதன் இயல்பாக கருதப்படுகின்றது.
ஆனால் இதனை பயன்படுத்தி ஊருக்குள் நுழையும் பாகுபலி மீது அண்மை காலமாக தாறுமாறாக தாக்குதல் நடத்தப்பட்டு வருவது வன உயிரின ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே பாகுபலி மீது கண்மூடித்தனமாக ஏராளமான ராக்கெட் வெடிகள் வீசப்பட்டு வந்த நிலையில், தற்போது கனமான பிளாஸ்டிக் குழாய்களால் துப்பாக்கி போல் உள்ள ஆயுதத்தின் மூலம் யானையை விரட்ட சிலர் பயன்படுத்தி வருகின்றனர். உள்பக்கம் ஸ்பிரிங் வைக்கப்பட்ட இந்த குழாயினுள் பெரிய கற்களை போட்டு யானையை நோக்கி இழுத்து விடுகின்றனர்.
இதில் இருந்து வேகமாக வெளியேறும் கற்கள் யானையை பலமாக தாக்கி காயப்படுத்தி வருகின்றன. இவையனைத்தும் வனத்துறையினர் கண் முன்னே நடந்து வருவது கூடுதல் வேதனை அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். யானை விரட்டும் பணியில் அவர்களுக்கு உதவுவதாக கூறி வனத்துறையினருடன் உடன் செல்லும் சிலரே இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவதாக கூறும் வன உயிரின ஆர்வலர்கள் இது போன்ற இரக்கமற்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளனர்.
மனிதர்களின் இம்மாதிரியான செயல்கள் மனிதர்களை தாக்க முற்படாத யானையின் இயல்பை மாற்றி அதனை மூர்க்கத்தனமானதாக மாற்றி விடும் என எச்சரித்துள்ளனர். மேலும் இதனால் தற்போது யானையின் இடது கண் பார்வையில் குறைபாடு உள்ளதாலும், பால்ரஸ் எனப்படும் சிறு சிறு குண்டுகள் யானையின் உடலில் உள்ளதால் அவற்றை அகற்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் இது போன்று யானைக்கு எதிரான செயல்களை மக்கள் கைவிட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தந்தங்களுக்காக யானைகள் வேட்டை: சிபிஐ சிறப்பு குற்றப்பிரிவின் கீழ் முதல் வழக்கு பதிவு!