கோயம்புத்தூர்: ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் குரு என்ற குருசாமி (40). இவர் 2010ஆம் ஆண்டு சுசி ஈமு பாய்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
இந்த நிறுவனத்தில் கவர்ச்சிகரமான இரண்டு திட்டங்களை விளம்பரப்படுத்தி, பணம் தருவதாகவும் கூறினார். இதனை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 96 நபர்கள் பல லட்சம் ரூபாய்களை முதலீடு செய்துள்ளனர். ஆனால் குருசாமி திட்டத்தில் அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்குப் பணம் தராமல் மோசடி செய்துள்ளார்.
நீதிபதி உத்தரவு
இதில் பாதிக்கப்பட்ட நாமக்கல் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் நாமக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவில் 2012ஆம் ஆண்டு குருசாமி மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் நாமக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குருசாமியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்த நிலையில் நீதிபதி ரவி, மோசடி செய்த குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 கோடியே 40 லட்சம் அபராதம் விதித்து இன்று (செப். 22) உத்தரவிட்டார். குருசாமி நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் நீதிபதி அவருக்குப் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ‘திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படும்’