பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி அருகே உள்ள நவமலை பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்புக்குள் அடிக்கடி ஒற்றைக் காட்டு யானை புகுந்து அச்சுறுத்தி வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு காளியப்பன் என்பவரின் ஓலைக் குடிசையை யானை சேதப்படுத்தியுள்ளது.
மேலும், ஏற்கனவே இந்த யானை தாக்கி பலியான மாகாளி என்பவரது வீடும் அதன் மூலம் சேதப்படுத்தபட்டுள்ளது. இந்தத் தகவலையறிந்த வனத்துறையினர் அதிகாலை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்துவிட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தக்க பாதுகாப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.
இந்த நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியைச் சுற்றிலும் சோலார் மின் வேலி அமைக்கவுள்ளதாகவும் கூடிய விரைவில் அந்த யானையைக் காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் கூறினர்.
இதுபோல அந்த யானையின் தொந்தரவு அதிகரித்தால், தமிழ்நாடு அரசிடம் கலந்து பேசி அந்த யானையைப் பிடித்து வேறு அடர்ந்த வனப்பகுதியில் விடவும் வனத்துறை அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.