பொள்ளாச்சி அருகில் உள்ள நவமலைப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக ஒற்றை ஆண் காட்டு யானை குடியிருப்புகளில் புகுந்து அச்சுறுத்திவந்தது. கடந்த மாதம் 25, 26ஆம் ஆகிய இரு நாட்களில் மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி ரஞ்சனி, மாகாளி என்ற இரண்டு பேரை ஒற்றை ஆண் காட்டு யானை தாக்கிக் கொன்றது.
இதையடுத்து வனத் துறை சார்பில் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து பரணி, சுயம்பு ஆகிய இரண்டு கும்கி யானைகளை கொண்டுவந்து நவமலை பகுதியில் முகாமிட்டுள்ளனர். இரவு நேரங்களில் காட்டு யானை ஊருக்குள் புகாமல் இருக்க கும்கி யானைகள் துணைகொண்டு காட்டு யானையை விரட்டிவந்தனர்.
நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஆழியார் நகர் குடியிருப்புக்குள் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வனத் துறையினர், காட்டு யானையை ஊருக்குள் இருந்து விரட்டும் பணியில் விடிய விடிய ஈடுபட்டனர்.
தொடர்ந்து இந்த ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால், வனத் துறையினர் போர்க்கால அடிப்படையில் அந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆழியார் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.