கோவை மருதமலை வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை வாயில் காயத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சாப்பிட முடியாமல் சுற்றிதிரிந்ததாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில், வனத்துறை மருத்துவர் சுகுமார் மற்றும் வனப் பணியாளர்கள், வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த மக்னா யானையை பின் தொடர்ந்து காயம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து கண்டறிய முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால் அந்த காட்டு யானை ஒரே இடத்தில் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து சென்றதால் அதற்கான காரணத்தைக் கண்டறிய முடிவில்லை. இந்நிலையில் மருதமலை வனப்பகுதியிலிருந்து மாங்கரை வனப்பகுதி வழியாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கேரள வனப்பகுதியான நல்லசிங்கா வனப்பகுதிக்குள் மக்னா யானை சென்றது.
இதனைக் கண்ட வேட்டை தடுப்பு காவலர்கள் வனத்துறை உயர் அலுவலர்களுக்கு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கோவை வனத்துறை அலுவலர் வெங்கடேஷ் கேரள வனத்துறை அலுவலர்கள் தொடர்பு கொண்டு காயம்பட்ட மக்னா யானை வனப்பகுதிக்குள் சென்றது குறித்து தகவல் தெரிவித்தனர்.
மன்னார்காடு மாவட்ட வன அலுவலர் சுனில் உத்தரவின் பேரில் கேரள வனத்துறையினர் காயம்பட்ட யானையை தற்போது கண்காணித்து வருகின்றனர். காயம்பட்ட இந்த மக்னா யானைக்கு இன்று வயநாட்டிலிருந்து மருத்துவக் குழு சிகிச்சை அளிக்க உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
யானைக்குச் சிகிச்சை அளிக்கும்போதுதான் காயம் எப்படி ஏற்பட்டது என்பது தெரியவரும். அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடியால் இந்த காயம் ஏற்பட்டு இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகின்றனர். வாயில் காயம்பட்ட மக்னா யானையை காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: சாலையில் ஹாயாக வாக்கிங் வந்த கொம்பன் யானை!