கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி பகுதிகளில் தற்போது ஏராளமான யானைகள் வசிக்கின்றன.
யானைகளின் வலசை செல்லும் காலம் என்பதால் பல்வேறு இடங்களில் இருந்து வந்த யானைகள் அங்கு தங்கியுள்ளது. பவானி ஆற்றில் தண்ணீர் உள்ளதால் மலைப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் தண்ணீருக்காகவும் உணவிற்காகவும் தேக்கம்பட்டி பகுதிக்கு நாள்தோறும் வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் தேக்கம்பட்டியில் யானைகள் முகாம் நடைபெற்ற பகுதிக்கு அருகே தனியார் தோட்டத்தில் காதில் ரத்தம் வழிந்த நிலையில் பெண் யானை உயிர் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன், முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்திருப்பது 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அதன் காதுப் பகுதியில் ரத்தம் வழிந்த நிலையில் காயங்கள் உள்ளதால் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில் வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.