கோயம்புத்தூர்: ஆதரவற்ற இரண்டு யானைக் குட்டிகளும், அதன் பராமரிப்பாளர்களுக்கு இடையேயான பாசப்போராட்டத்தை வெளிப்படுத்தும் 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் ஆஸ்கர் மகுடம் சூடியதை அடுத்து உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில், முன்னாள் வனத்துறை மருத்துவர் அசோகன் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்துக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில், "முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றியுள்ளேன்.
அந்த காலத்தில் பல யானைகளை காப்பாற்றி இருந்தாலும் பொம்மி என்ற அம்மு யானை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. ஆதரவற்ற குட்டி யானைகளை வளர்ப்பது கடும் சிரமமான பணி. அவற்றை இரவு, பகல் பாராமல் கண்காணிக்க வேண்டும். போதிய வசதிகள் செய்து தர வேண்டும். ஆசனூர் வனப்பகுதியில் மிகவும் பலவீனமாக நிலையில் மீட்கப்பட்ட அம்மு யானையை, தாய் யானையுடன் சேர்த்து வைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தது.
அதன் பின்னர் சத்தியமங்கலம் வனக் கால்நடை மருந்தகத்திற்கு அந்த யானை கொண்டு வரப்பட்டது. உடல் பலவீனமாகவும், வயிறு வீங்கியிருந்த நிலையிலும் இருந்தது. அந்த யானை பசியால் ஜல்லிக்கற்களை சாப்பிட்டு இருந்ததால், பால் குடிக்கவில்லை. மலம் கழிக்கவில்லை. பின்னர் மருந்து கொடுத்து சிகிச்சையளித்தோம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தினமும் 15 லிட்டர் பால் கொடுக்க வேண்டும். மாட்டுப்பால், ஆட்டுப்பால் ஆகியவை கொடுக்க முடியாததால், லக்டோஜின் கொடுத்தோம். தினமும் சத்தான மருந்துகள், உணவுகள் வழங்கினோம். தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பால் கொடுக்க வேண்டும். குளிக்க வைத்து உடற்பயிற்சிக்காக நடைபயணம் அழைத்துச் செல்வோம். இதனைப் பார்க்க தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்துச் செல்வார்கள். அனைவராலும் விரும்பும் பெயர் அம்மு என்பதால், அந்த யானைக்கு அம்முக்குட்டி என பெயரிட்டோம்.
பெயருக்கு ஏற்ப அனைவருக்கும் செல்லப்பிள்ளையாக அந்த யானை இருந்தது. அம்மு என அழைத்தால் ஓடி வரும். தினமும் எங்களுடன் வந்து படுக்கும். பால் வேண்டுமென்றால் தும்பிக்கையை தூக்கியபடி குழந்தை போல சத்தமிடும். குழந்தையை தூங்க வைப்பது போல பேன், ஏசி போட்டு தூங்க வைப்போம். பின்னர் அம்மு பராமரிப்பிற்காக முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பொம்மி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாடு யானை வளர்ப்பிற்கு சிறந்த இடமாக உள்ளது. யானை வளர்ப்பு என்பது ஒரு கலை. 100 ஆண்டுகள் தொன்மையான முதுமலை யானைகள் முகாமில், யானை வளர்ப்பில் அனுபவம் மிக்கவர்கள் உள்ளார்கள். யானை பாகன்கள் குடும்பம் யானையை தத்தெடுப்பது போல வீட்டில் இரு குழந்தையாக வளர்க்கிறது.
யானை மீது நாம் வைக்கும் அன்பை, அது திரும்ப தரும். குறைந்த காலமே என்னிடம் இருந்தாலும் ஒரு வருடம் கழித்து முதுமலைக்கு நான் பார்க்கச் சென்ற போது, என்னை அடையாளம் கண்டு அன்பை வெளிப்படுத்தியது. இந்த யானை பற்றிய படம் விருது பெற்றிருப்பது பெருமைக்குரியது. விருது பெற்றதை அடுத்து பலர் அந்த யானையைப் பற்றி என்னிடம் விசாரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதில் எங்களது பங்கும் இருப்பதால் மகிழ்ச்சி. இது தமிழ்நாடு வனத்துறைக்கு ஒரு மகுடம். இப்படம் யானைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஆனை தான் தெரியும், ஆஸ்கரெல்லாம் தெரியாது" முதுமலை பெள்ளியின் வெள்ளந்திப் பேச்சு