கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே உள்ள நல்லமுடி தேயிலை தோட்டத்தில் கடந்த ஒரு வாரமாக 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்க முடியாத சூழல் நிலவி வந்தது.
இதையடுத்து, தேயிலை தோட்ட நிர்வாகம் காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு பல மணி நேர போராட்டத்திற்குப்பின் ஒற்றை காட்டு யானை, அதன் இரண்டு வயது குட்டியை தவிர மற்ற காட்டு யானைகள் அங்கிருந்து நகர்ந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றன.
அதையடுத்து, குட்டி யானையை கண்காணித்தபோது குட்டி யானையின் காலில் கட்டி இருப்பதால் அதனால் நடக்க முடியாத நிலை இருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குட்டி யானைக்கு வனத்துறையினர் உடனடியாக தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துவந்தனர்.
இந்நிலையில், குட்டி யானை இன்று தோட்டத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வனத்துறையினர் குட்டியானை உயிரிழந்தது தொடர்பாக விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தாளவாடி அருகே மின்வேலியில் சிக்கி பெண் யானை உயிரிழப்பு!