கோயம்புத்தூர்: சமீப காலமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு வந்து இரை தேடுவதும், மின்சாரம் தாக்கி உயிரிழப்பதும் தொடர் கதையாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்தில் யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
அதனை தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் அருகே மின்கம்பத்தில் மோதியதில் ஓர் ஆண் யானை உயிரிழந்தது. இந்த நிலையில் தற்போது அப்பனூர் வனப்பகுதியில் மின் கம்பியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனைகட்டி அடுத்த கேரள மாநிலம் அட்டப்பாடி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் கேரள - தமிழக வனப்பகுதிக்குள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் ஆனைகட்டி அடுத்த அப்பனூர் பழங்குடியினர் கிராமத்திற்கு ஒற்றை ஆண் யானை வந்துள்ளது.
அப்போது குடியிருப்பு பகுதிக்குள் அந்த யானை நுழைய முயன்ற நிலையில், தாழ்வான மின் கம்பியில் சிக்கி அதே இடத்தில் உயிரிழந்தது. இதனை அடுத்து யானையின் பிளிறல் சத்தத்தை கேட்ட கிராம மக்கள், அங்கு சென்று பார்த்தபோது உயிரற்ற நிலையில் யானை சடலமாக கிடந்துள்ளது.
இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அகழி வனத்துறையினர், யானை உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மேடான பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மின் கம்பத்தில் உள்ள கம்பிகள் முறையாக உயர்த்தப்படாமல் இருந்தது யானையின் உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்தது.
இதனை அடுத்து மின் வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானையின் உடலுக்கு பழங்குடியின மக்கள் மலர் தூவி, அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்..! நொடிப்பொழுதில் உயிரை காத்த காவலர்! வீடியோ வைரல்!