கோவை - திருச்சி சாலையில் வீட்டில் தனிமையில் வசித்துவந்தவர் கிருஷ்ணசாமி. இவர் நேற்று (அக். 02) கேபிள் ஒயரால் கழுத்தை இறுக்கியும், கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்துவந்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவல் துறையினர் இவ்வழக்குத் தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் விசாரித்துவந்தனர். காவல் துறையின் விசாரணையில் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள சாக்கோட்டையைச் சேர்ந்த விக்ரம் (27), ஒண்டிப்புதூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் எனத் தெரிந்தது.
அவர்கள் இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கைதுசெய்யப்பட்ட விக்ரம் வாடகை கார் ஓட்டுநராகப் பணியாற்றியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் சரவணம்பட்டியில் நடந்த ஒரு திருட்டு வழக்குத் தொடர்பாக, விக்ரம் கைதுசெய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறையிலிருந்த சக கைதியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களாகியுள்ளனர்.
பெரிய கொள்ளையில் ஈடுபட்டு சொகுசாக வாழ உள்ளதாக விக்ரம் தனது திட்டத்தை தெரிவித்து, அதற்கேற்ற வசதி படைத்த நபர்கள் யாராவது உள்ளார்களா என அந்தக் கைதியிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்தக் கைதி, சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே மேற்கண்ட வீட்டில் கிருஷ்ணசாமி தனிமையில் வசித்துவருவதையும், அவரிடம் பணம், சொத்துகள் அதிகம் உள்ளன என்பதையும் விக்ரமிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து வெளியே வந்த விக்ரம், ஒண்டிப்புதூரில் வசிக்கும் தனது ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் சேர்ந்து, மேற்கண்ட கிருஷ்ணசாமியின் வீட்டில் புகுந்து அவரைத் தாக்கி கொலைசெய்துள்ளனர். பின்னர், வீட்டில் இருந்த பணம், பொருள்கள், வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் ஆகியவற்றை திருடிவிட்டு, காரைக்குடிக்கு தப்பிச்சென்றுள்ளனர்.
காரைக்குடியில் டயர் பஞ்சரானதால், காரை அங்கேயே நிறுத்திவிட்டு, அருகிலுள்ள விடுதியில் பதுங்கியிருந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்து கார், நகைகளைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் விக்ரமை கோவை மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.
இதையும் படிங்க:பைக்கை கொளுத்திய இரண்டு பெண்கள் யார்? போலீஸ் விசாரணை