கோயம்புத்தூர் மாவட்டம் கீரணத்தம் கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர்கள் நடராஜ் - சரஸ்வதி தம்பதி. இவர்களது மகன், மருமகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தப்பிய பேரன் ஹரிசனுக்கு தண்டுவடம் பாதிக்கப்பட்டதால் இடுப்பிற்கு கீழ் முழுவதும் செயலிழந்து விட்டது.
இந்நிலையில், ஹரிசனுக்கு கேரளாவில் அகழி மருத்துவமனையில் வைத்தியம் பார்த்து வருகின்றனர். வாடகை வீட்டில் இருக்கும் தங்களுக்கு அரசு ஒரு வீடு ஒதுக்கி தந்து உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சரஸ்வதி கூறுகையில், எங்களது மகன், மருமகள் விபத்தில் இறந்து இரண்டரை ஆண்டுகள் ஆன நிலையில், வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். வயதானதால் வேலைக்கும் செல்ல முடியாத நிலை இருப்பதால் வீட்டிற்கு வாடகை தர முடியாமல் தவித்து வருகிறோம்.
அதே சமயம் ஹரிசன் இயற்கை உபாதைகளை கழிவறைக்கு சென்று கழிக்க இயலாததால் வீட்டிற்குள்ளே கழித்து விடுகிறான். இதனால் வீட்டின் உரிமையாளர்கள் தங்களை காலி செய்யும் படி கூறுகிறார்கள். வீடு கேட்டு இரு முறை அரசுக்கு மனு அளித்தோம். ஆனால் வீடு தர மூன்று ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறார்கள்.
வீடு இல்லை என்று உறுதியாக கூறிவிட்டால் ஏதாவது காப்பகத்திலாவது சேர்ந்து விடுகிறோம். தற்போது கரோனா காலம் என்பதால் கேரள மருத்துவமனைக்கும் செல்ல இயலாத நிலையில் தவித்து வருகிறோம். எனவே, மாவட்ட ஆட்சியர் தங்களுக்கு ஒரு வீடு அளித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.