கோயம்புத்தூர்: கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி சர்வஜன மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று (ஆகஸ்ட் 2) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் இடையே உரையாடினார்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ''DMK கண்டெடுத்த MKS (மு.க.ஸ்டாலின்) என்ற அவர், இந்த AMPக்கு (அன்பில் மகேஷ் பொய்யாமொழி) கொடுத்த பொறுப்பு தான், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். அதன் வாயிலாகத்தான் நான் இந்த நிகழ்ச்சியில் இன்று கலந்து கொள்கின்ற வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.
பாரதியாரின் வாழ்க்கை PSG குழுமம் உண்மையாக்கி கொண்டுள்ளதற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீதிக் கட்சியின் வழியில் திராவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். தந்தை பெரியார் வந்து சென்ற ஒரு பள்ளிக்கூடம் இது. ரவீந்திரநாத் தாகூர் தேசிய கீதம் பாடிய பள்ளி இது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகியோரால் பாராட்டுப் பெற்ற ஒரு பள்ளிக்கூடம் இது.
1921ம் ஆண்டு தீபாவளியன்று பீளமேடைச் சேர்ந்துள்ள இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான், இந்தப் பள்ளி. இப்படிப்பட்ட பெருமைமிக்க பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பெருமையாக நினைக்க வேண்டும். பீளமேடு பகுதியை, ஒரு முக்கியமான பகுதியாக மாற்றி காட்டியது கல்வி நிலையங்கள் தான். அந்தந்த காலங்களுக்கு ஏற்ப மாணவர்களுக்குப் பாடங்களை நடத்த வேண்டும்.
தொழில் நிறுவனங்களுக்கு ஒரு நல்ல மனிதர்களை அளிப்பது எதுவென்று கூறினால், அது எங்கள் பள்ளிக்கல்வித்துறை தான். அகாடமிக் சார்ந்த பாடங்களை மட்டுமல்லாமல் மாணவர்களை அடுத்த நிலைமைக்கு கொண்டு செல்லக்கூடிய பாடங்களையும் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை நான் முன் வைக்கிறேன். மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள் என பெற்றோர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
பிள்ளைகளுடைய தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பது தான் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகப் பார்க்கிறேன். மாணவர்கள் நீங்கள், உங்களுடைய பெற்றோர் ஆசிரியர் என்ன அறிவுரை கூறுகிறார்களோ அதனை மனதில் வைத்துக் கொண்டு இந்த வயது படிக்கின்ற வயது என்பதால், படிப்பில் கவனம் செலுத்துங்கள்.
நம்முடைய ஆசிரியர், பெற்றோருக்கு பெருமையைத் தேடித் தர வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், பி.எஸ்.ஜி கல்விக் குழுமத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 224 மாணவர்கள் சேர்க்கை!