நீலகிரி மாவட்டம் மசனக்குடியில் இரண்டு தினங்களுக்கு முன்பு தீ காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டுயானைக்கு, வனத்துறையினர் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தது. இந்நிலையில், யானையின் மீது டயரில் தீ வைத்து வீசும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யானையின் உயிரிழப்புக்கு காரணமான இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து சூழல்வியல் செயல்பாட்டாளர் மோகன்ராஜ் கூறுகையில், "யானை இறந்தது மசனக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் மக்களுக்கு கரோனா காலம் என்பதால் வேலையில்லை. இதனால் பல்வேறு வாழ்வாதார சிக்கல்கள் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில் வனவிலங்குகள் வீட்டின் வாசலுக்கு வந்து தொந்தரவு செய்யும் போது அதன் மீது வன்மத்தை காட்ட முற்படுகின்றனர். வனவிலங்குகளை பாதுகாக்க, உள்ளூர் மக்களுடன் வனத்துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அங்கிருக்கும் தங்கும் விடுதிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதை போக்கினால் தான் வன்மம் குறைய வாய்ப்புகள் உள்ளன" என்று தெரிவித்தார்.