கோவை: அரபிக் கடலில் உருவான காற்று வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று (டிச.16) முன்தினம் முதல் அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வீடுகளைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் தாழ்வான பகுதியிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடித் தஞ்சமடைந்து வருகின்றனர். அதேபோல் சாலை போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்புப் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரளாவில் ஆளுநர் - அரசு இடையே உச்சபட்ச மோதல்! அரசுக்கு எதிராக ஆளுநர் போர்க்கொடி! முதலமைச்சர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை! என்ன நடக்குது?
அதேபோல் அதி கனமழையால் பாதிப்படைந்துள்ள மாவட்டங்களில் ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களைத் தங்க வைத்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்திலிருந்து ஏராளமான தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வெள்ள நிவாரணப் பணிகளுக்கு 1.3 டன் பால் பொருட்கள், பிரெட் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியால் தன்னார்வ அமைப்புகள் மற்றும் தொழில் துறையினர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு இந்த உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தென்காசியில் மழை மற்றும் வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு..! உரிய நிவராணம் வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை..!