சேலம் மாவட்டம் நடுவநேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் அண்ணாமலை - பிரியா தம்பதியினர். இவர்கள் கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே உள்ள பெரியகுயிலி கிராமத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் கடந்த 17ஆம் தேதி இரவு வீட்டில் மது அருந்தியுள்ளனர். போதை அதிகமான நிலையில், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மனைவி பிரியா, கணவர் அண்ணாமலை தலையில் கல்லைத் தூக்கிப் போட்டதில் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக பிரியா இதுகுறித்து தனது அக்காள் கணவர் செல்வராஜை தொடர்பு கொண்டுள்ளார். செல்வராஜ் ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு வந்து உடலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு மதுபோதையில் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார்.
ஆனால் மருத்துவ பரிசோதனையில் விபத்தல்ல, கொலை என்பது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், செட்டிபாளையம் காவல் துறையினர் பிரியாவையும், அவரது அக்காள் கணவர் செல்வராஜையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!