கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாக போய்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் குடிநீரின்றி மக்கள் ஆங்காங்கே சாலையில் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டதை யாரும் மறந்திருக்க மாட்டோம். இன்னும் பல பகுதிகளில் தண்ணீரின்றி மக்கள் தவித்துவருகின்றனர்.
பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் குடிநீர் தேவையை ஆழியாறு அணை நிவர்த்தி செய்துவருகிறது. ஆனால் தற்போது பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிவருகிறது. இது குறித்து மக்கள் புகாரளித்தும் அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். அதுமட்டுமின்றி நகராட்சியில் பாதாள சாக்கடைப் பணியின்போது தோண்டப்படும் குழிகள் மூலம் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்படுகிறது.
இதனால் குடிநீர் குழாயிலிருந்து நீர் வெளியேறி வீணாக சாலையில் பாய்கிறது. எனவே இதுபோன்று பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும், இதற்கென தனிக்குழு அமைத்து கண்காணித்து உடைந்த குழாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொள்ளாச்சி மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கோரிக்கைவைக்கின்றனர்.