கோவை அடுத்த ஆலாந்துறை பகுதியில் உள்ள காளிமங்கலம் பகுதி, மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியை ஒட்டிய இடமாகும். இங்கு அடிக்கடி யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் கிராமத்திற்கு அருகில் குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் 600 வீடுகளில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியமர்த்தப்பட உள்ளனர். ஏற்கனவே யானை நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் கூடுதலாக ஆயிரக்கணக்கான மக்கள் குடியமர்த்தப்பட்டால் அப்பகுதியில் சுற்றுசூழல் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
மேலும், தங்களுடன் சேர்த்து புதிதாக குடியமர்த்தப்படும் மக்களும் யானை தாக்குதல்களுக்கு உள்ளாவதற்கு வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி காளிமங்கல கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை சிறுவாணி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த ஆலாந்துறை போலீசார் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் அலுவர்கள் வந்து உத்தரவு தரும் வரை போராட்டத்தை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என சாலை மறியலை தொடர்ந்தனர்.
இதனையடுத்து துணை வட்டாட்சியர் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து மாவட்ட நிர்வாகம், அரசுக்கு தகவல் தெரிவிக்கும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.