கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தேதி நாளையுடன் முடிவடையும் நிலையில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.
அமைச்சர் வீட்டில் முற்றுகை
இதில் பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்செய்து முடித்து பரப்புரையைத் தொடங்கியுள்ள நிலையில், கோவை மாநகராட்சியில் வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனைவி, மகள்களுக்கு பெண்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி திமுக மகளிர் அணியைச் சேர்ந்த சிலர், கோவை கொடிசியா வளாகத்திற்கு அருகிலுள்ள செந்தில்பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திமுகவில் 50 விழுக்காடு இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மகளிர் அணியில் உழைத்தவர்களுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை எனவும், கட்சியில் பெரிய அளவில் அறிமுகம் இல்லாமல் இருக்கும் நிர்வாகிகளின் மனைவி, மகள்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த விவகாரத்தை கட்சித் தலைமைக்கு எடுத்துச் செல்லவே அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகவும், கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்த மகளிருக்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.
ஃபேஸ்புக்கில் தற்கொலை செய்யப்போவதாக பதிவு
இந்த விவகாரம் குறித்து திமுக கிழக்கு மாவட்ட நிர்வாகியான கல்பனா செந்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ”50 விழுக்காடு மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் உண்மையாகவும் நேர்மையாகவும் கழகத்திற்காக மிகவும் கடினமாக உழைத்த மகளிர்.
இன்று நாம் ஆளும் கட்சியாக வந்த பிறகு நடுத்தெருவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளோம். எனக்கு வீட்டில் இருக்க முடியவில்லை, நெஞ்சு வெடிக்கிற மாதிரி இருக்கு, அதனால் நான் ஒரு முடிவை எடுத்திருக்கேன்.
அது யார் தடுத்தாலும் நிற்க மாட்டேன் அமைச்சர் வீட்டு முன்னாடி கொடிசியா கிட்ட தான் இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரம்தான் உயிரோட இருப்பேன் அதுக்கப்புறம் நம்ம தலைமை என்ன முடிவெடுக்குமோ? முக்கியத்துவம் கொடுக்கும்... என்று முழுசா நம்பறேன் என்னால் ஒரு விடிவு உங்க எல்லாத்துக்கும் வந்தா நான் நிச்சயமா மகிழ்ச்சி அடைவேன்” எனப் பதிவிட்டது கட்சி நிர்வாகிகளிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:எல்லையின் பாதகமான சூழலை எதிர்கொள்ள தயார் - ராஜ்நாத் சிங்