கோயம்புத்தூர்: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும், சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரி, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின், 'அவரவர் இல்லங்களில் திமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும்' என கேட்டுக்கொண்டார். இதையடுத்து திமுக நிர்வாகிகள் தங்களது இல்லங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோயம்புத்தூரில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் தலைமையில் பீளமேடு திமுக அலுவலகம் முன்பு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோன்று கருமத்தம்பட்டி பகுதியில் சூலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நித்யா மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், பலர் கலந்துகொண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவரவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது என வலியுறுத்தி கறுப்புக்கொடி ஏந்தி ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க:தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டவர் மீது பாய்கிறது குண்டர் சட்டம்