கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி திமுக தெற்கு வடக்கு ஒன்றியத்திற்குள்பட்ட திப்பம்பட்டி ஊராட்சியில் திமுக எம்பி கனிமொழி ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.
அப்போது, திமுக கொடி ஏற்றிய கனிமொழி பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், “பாலியல் வழக்கில் அதிமுக முக்கியப் பிரமுகர்கள் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக தலைவர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். மாவட்ட வாரியாக பெண்களுக்கென தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
விவசாயிகளின் நலன்கருதாமல் பாஜக அரசு விவசாயிகளை வஞ்சித்து சட்டத்தை இயற்றியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திலுள்ள குற்றப்பின்னணி கண்டுபிடிக்கப்படும். தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக எடப்பாடி அரசு மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அடிபணிந்து தமிழ்நாடு மக்களை ஏமாற்றுகிறது.
நீட் தேர்வு மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி நாடகம் ஆடுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கிராமங்கள்தோறும் நியாயமான முறையில் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும். இதுபோன்று, பொதுமக்களின் நலன்கருதி எண்ணற்ற திட்டங்களை தலைவர் ஸ்டாலின் நிறைவேற்றுவார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆட்சி மாற்றம் வேண்டுமென தமிழக மக்கள் நினைக்கின்றனர்! - கனிமொழி