கோவை மாவட்டம் காந்திபுரத்தில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து மாதர் சங்க அலுவலகம் முன்பு சிலிண்டருக்கு மாலை அணிவித்து நாமம் போட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து, அனைத்து இந்திய மாதர் சங்க அகில இந்திய செயலாளர் வாசுகி, "கேஸ் சிலிண்டர் விலை மாதாமாதம் உயர்த்தப்படுகிறது. கடந்தாண்டு மட்டும் 736 ரூபாயிலிருந்து 950 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்கக் கூடிய நிலையில் எத்தனை குடும்பங்கள் உள்ளன? தனியார் முதலாளிகளுக்கு வரிச்சலுகையை வழங்கும் மத்திய அரசு ஏழைகளுக்கு ஏன் கருணை காட்டுவதில்லை" என்றார்.
இதையும் படிங்க: சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து ஒப்பாரிவைத்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்