கோயம்புத்தூர்: துடியலூர் அடுத்த கதிர்நாயக்கன் பாளையத்தில் மத்திய காவல் பயிற்சி கல்லூரி 2 (சிஆர்பிஎப்) உள்ளது. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இங்கு பல்வேறு இராணுவ நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
இந்த முகாமில் படைப்பிரிவு வீரராகத் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெகன் (32) என்பவர் கடந்த சில வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை காவல் பணியிலிருந்த அவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் சிஆர்பிஎப் வளாகம் கோட்டர் கார்டு காப்பு அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
மேலும் ஜெகன் எஸ்எல்ஆர் துப்பாக்கியால் இரண்டு முறை கழுத்தில் சுட்டு கொண்டதில் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். ஜெகனுக்கும் அவரது முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்திற்கு பதிவு செய்து வழக்கு விசாரணை நடந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் ஜெகன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனிடையே குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து துடியலூர் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. மேலும் இந்த தற்கொலை சம்பவத்திற்கான காரணம் குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இறந்துவிட்டதாகக் கூறி ஜார்க்கண்டில் முதியவருக்கு ஓய்வூதியம் நிறுத்தம்!