கோயம்புத்தூரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. மாநகராட்சியை சுற்றியுள்ள குளங்களில் அழகுப்படுத்தும் பணி பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் நிலையில், சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திக் இன்று (நவ.7) திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் தரமற்றதாக உள்ளன. குளங்களை அழகுப்படுத்தும் பெயரில், நடைபாதைகளுக்காக குளத்தின் கரைகள் அகலப்படுத்தப்பட்டு குளங்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் வெளிப்படைத் தன்மை இல்லை. எந்தப் பகுதியில் என்ன பணிகள் நடக்கிறது என்பதை கூட தெளிவாக மாநகராட்சி தெரிவிக்க மறுக்கிறது. இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராத திட்டங்களை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார்.
மாநகராட்சியில் திட்டப் பணிகளுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது எனக் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் : ரசிகர்களின் வாழ்த்து மழையில் கமல்!