கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.
இருப்பினும், கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனை, கொடிசியா வளாகத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கோவை கொடிசியா வளாகத்தில் தற்போது சுமார் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்குள்ள நோயாளிகள் நேற்று (அக்.6) திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது இந்த மையத்திற்கு மருத்துவர்கள் சரிவர வருவதில்லை. இங்குள்ள செவிலியர்கள் மட்டுமே அவ்வப்போது வந்து சிகிச்சை அளிக்கின்றனர் என குற்றம்சாட்டினர்.
போதுமான மருத்துவர்கள் இல்லாமல் அவதியடைந்து வருவதாக கரோனா நோயாளிகள் பலரும் அந்த மையத்தில் இருந்து வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை காவல்துறையினர் ஒலி பெருக்கியின் மூலம் சமாதானம் செய்து மீண்டும் மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து நோயளிகளுடன் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: கோவையில் அதிகரிக்கும் கரோனா: இன்று 434 பேருக்கு தொற்று உறுதி