உலகையே அச்சுறுத்திவரும் கரோனா நோய்ப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்துவது, முகத்திரை, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க மக்களை அறிவுறுத்துவது என மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இருப்பினும் நோயின் தாக்கம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், கரோனாவை எதிர்க்க அரசுக்கு உதவும் வகையில் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை நான்காம் ஆண்டு பயிலும் மாணவர் கிருபா சங்கர், அவரது குழுவினர் அந்நோயைக் கண்டறிய மென்பொருள் ஒன்றையும், மித்திரன் என்ற செயலியையும் உருவாக்கியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள மித்திரன் செயலி, ஒருவரின் எக்ஸ்ரே பதிவை வைத்து அவருக்கு கரோனா இருக்கிறதா இல்லையா என்பதை சில நொடிகளிலே கண்டறிந்துவிடுமாம்.
அதிகளவில் மக்களைச் சோதிக்கவும், கரோனா மட்டுமில்லாமல் நிமோனியா, சார்ஸ் போன்ற வைரஸ் தொற்றுகள், பாக்டீரியா தொற்றுகளைக் கண்டறியவும் இந்த செயலி பயன்படும் என்று அதனை வடிவமைத்துள்ள மாணவர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கிருபா ஷங்கர் கூறுகையில், "இந்தச் செயலி, மென்பொருளைப் பயன்படுத்தி கோயம்புத்தூரில் மட்டும் ஒருநாளைக்கு 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் பேரை பரிசோதனை செய்யலாம்.
இந்தப் பரிசோதனைக்குத் தேவையெல்லாம் இந்த மித்திரன் செயலியும், எக்ஸ்ரே இயந்திரமும்தான். ஆகவே, எக்ஸ்ரே இயந்திரம் இருக்குற எல்லா இடத்திலும் நாம் பரிசோதனை மேற்கொள்ளலாம்.
மேலும், எத்தனை பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்தும் மித்திரன் செயலியில் தெரிந்துகொள்ளலாம்.
ஜியோ மேப்பிங் தொழில்நுட்பம் மூலம் இதற்கான தகவல்களை நாங்கள் சேகரித்துள்ளோம். யார் யாரெல்லாம் வெளிநாடு சென்று திரும்பினார்கள். அவர்கள் எந்தெந்த இடங்களுக்குச் சென்றிருக்கிறார்கள் என்பது குறித்து துல்லியமான தகவல்கள் பெற்றுக்கொள்ளலாம்.
அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்யவும் முடியும். குறிப்பாக விவசாயப் பொருள்களை வாங்க இந்தச் செயலி உதவும். இதனால் கரோனா விரைவில் கட்டுப்படுத்தப்படும். தமிழ்நாட்டிற்கு வருமானம் பெருகும்" என்றார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 40 மாணவர்கள் தயாரித்த இந்தச் செயலி ஒப்புதலுக்காக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துக்கும், தமிழ்நாடு செயலகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : கச்சா எண்ணெய்: 20 விழுக்காடு விநியோக வீழ்ச்சியால் விலை கடும் சரிவு!