கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஆத்திகுட்டை பகுதியில் சாராயம் விற்பதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு காவலர்களும், அன்னூர் காவல் நிலைய காவலர்களும் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது நாச்சிமுத்து என்பவரது தோட்டத்து சாலையில் காட்டு பன்றியை வேட்டையாட மறைத்து வைத்திருந்த அவுட் காயை (நாட்டு வெடி) பறிமுதல் செய்தனர்.
பின்னர் காவலர் செந்தில்குமார் அதைக் கீழே வைக்கும்போது எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது. இதில் அவருக்கு கால் பகுதி, நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சக காவலர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் சாராயம் வைத்திருந்த நாச்சிமுத்து என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் மதுக்கடைகள் மூடப்பட்டதால் காட்டுப் பகுதியில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சியதும், காட்டுப்பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடிகளை வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர் மீது சட்ட விரோதமாக வெடிமருந்து வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாட்டு வெடி வெடித்து காவலர் ஒருவர் காயமடைந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேனியில் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற இருவர் கைது!