கோவை: மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றை ஆண் யானை பாகுபலி கடந்த சில மாதங்களாக விவசாய நிலங்களில் தொடர்ச்சியாக புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் அந்த யானைக்கு காலர் ஐடி பொருத்தி யானையின் நடமாட்டத்தைக் கண்டறிய வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதனையடுத்து கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பாகுபலி யானைக்கு காலர் ஐடி பொருத்தும் முயற்சி தொடங்கியது. 3 நாட்கள் நடந்த இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. யானையின் பின்னால் தொடர்ச்சியாக வனத்துறையினர் சுற்றியதால் பயந்துபோன யானை இயல்பு நிலைக்கு திரும்பும்வரை கண்காணித்து பின்னர் காலர் ஐடி பொருத்த வனத்துறையினர் முடிவு செய்திருந்தனர்.
கடந்த சில நாள்களாக பாகுபலி யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சமயபுரம் வழியாக விவசாய நிலங்களுக்குள் சென்றுவருகிறது. இந்நிலையில், நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை ஊருக்குள் நுழைய முயற்சி செய்தது. அப்போது, அங்கு வந்த வனத்துறையினர், பாகுபலி யானை மீது சரமாரியாக பட்டாசுகளை வீசி எறிந்தனர்.
இதனால், அச்சமடைந்த யானை எந்த திசையில் செல்வது என குழம்பி திக்குத் தெரியாமல் சென்றது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை பட்டாசு கொண்டு விரட்டக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், வனத்துறையினரே இதுபோல் அத்துமீறி செயல்படுவது வேதனையளிக்கிறது என்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த தோட்ட உரிமையாளர்கள் யானைமீது பட்டாசுகளை வீசி எறிவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், உணவு தேடி ஊருக்குள் வரும் காட்டு யானையைத் தடுக்காமல் அதன்போக்கிலேயே விடவேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் மட்டுமே யானைகள் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மனித - விலங்கு மோதலுக்கு முற்றுப்புள்ளி எப்போது?