கோயம்புத்தூர்: குனியமுத்தூர் அடுத்த மைல்கல் பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியினைச் சுற்றி பிரம்மாண்ட சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை கட்டுமானப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வெளி மாநில தொழிலாளர்கள் 6 பேர் சிக்கினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டதுடன், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கண்ணையன், ஜெகநாதன், சச்சிம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிபில்போயால் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஒப்பந்ததாரர் சீனிவாசன் என்பவர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவ இடத்தில் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், கோவை தெற்கு காவல் உதவி ஆணையர் ரகுபதி ராஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளது. கல்லூரியைச் சுற்றியுள்ள அனைத்து சுவர்களுமே இந்த நிலைமையில்தான் உள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பே கனமழை பெய்யும் பொழுது நானும், செயலாளரும் இங்கு வந்து பார்த்தோம். அப்பொழுதே மழை நீர் முழங்கால் அளவிற்கு இருந்தது.
ஏற்கனவே இருமுறை எச்சரித்தும் கல்லூரி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளவில்லை. கல்லூரி நிர்வாகம் இந்த நிலைமையில்தான் உள்ளது. சுவர் இடிந்து விழுந்ததற்கு மாநகராட்சி பொறுப்பேற்க முடியாது என இருந்தாலும், பலமுறை மாநகராட்சி தரப்பில் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், கல்லூரி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. கல்லூரி நிர்வாகத்தின் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சுற்றுச்சுவர் கம்பி எதுவுமில்லாமல் வெறும் கற்களை மட்டுமே வைத்து கட்டிக் கொண்டு சென்று உள்ளார்கள். பழனியப்பா நகரில் உள்ள ஓடையை ஆக்கிரமிப்பு செய்து காம்பவுண்ட் கட்டி உள்ளார்கள்” என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து காவல் உதவி ஆணையர் ரகுபதி ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், “சுற்றுச்சுவர் கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கும் பொழுது சுவர் இடிந்து விழுந்துள்ளது. ஐந்து பேர் அங்கு வேலை செய்து வந்ததில் நான்கு பேர் உயிரிழந்து விட்டனர. ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். உயிரிழந்தவர்களில் மூன்று பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் ஒருவர். மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்” என தெரிவித்தார். மேலும், பரூண் கோஸ் என்பவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பக்கத்து வீட்டு சிமெண்ட் விழுந்ததால் தகராறு.. கூலித் தொழிலாளி உயிரிழப்பு!