இது குறித்து ஈடிவி பாரத்திற்கு இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ரவிக்குமார் கூறுகையில், "கரோனா மூன்றாம் அலை ஆகஸ்ட் மாதத்தில் வரக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துவருகின்றனர். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும்பொழுது வைரஸ் தொற்று அதிகரிக்கக்கூடும்.
மூன்றாம் அலை என்பது வைரஸ் உருமாறி குழந்தைகளை அதிகமாக தாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. குழந்தைகளைத் தாக்கும்பொழுது தற்போது உள்ளது போல் உயிரிழப்புகள் இருக்காது என்பது கருத்து.
குழந்தைகளை வைரஸ் தொற்று பாதித்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறை பற்றி தற்போது இருந்தே இந்திய மருத்துவ சங்கத்தினர் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றோம். குழந்தைகளை இதில் இருந்து காப்பதில் பெற்றோர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம், கிருமிநாசினி உபயோகிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூற வேண்டும். பிற நாடுகளில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.
இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் ஒன்றிய அரசிடம் அதிகப்படியான தடுப்பூசி கிடைக்கப்பெறும் பட்சத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுவருகிறோம்.
தனியார் ஆய்வகங்கள், சில தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைக்கு அதிகப்படியான கட்டணங்கள் வசூலிப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
இது குறித்து விசாரிக்கும்பொழுது கட்டணங்கள் குறைந்துள்ள தகவல், அரசாணைகள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றே பெரும்பாலான ஆய்வகங்கள் தெரிவிக்கின்றன. தகவல் கிடைக்கப்பெற்ற மருத்துவமனைகள், ஆய்வகங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதனை மீறி செயல்படும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
இந்திய மருத்துவச் சங்கத்தின் கீழ் உள்ள 5000 மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை அனுப்பப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது" என்றார்.
தமிழ்நாட்டில் கரோனா மூன்றாவது அலையைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: கரோனா 3ஆவது அலைக்குத் தயாராக இருக்க உத்தரவு