கோயம்புத்தூர், கிருஷ்ணா நகர் சொக்க முத்து வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (56). இவருக்கு கடந்த பத்து நாள்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக, அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்தபோது, கரோனா வைரஸ் இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 13) இரவு 7 மணிக்கு நோய் குணமடைந்தது என்று சொல்லி மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே மூச்சுத்திணறல் வந்துள்ளது.
இதையடுத்து அவர் மீண்டும் சிகிச்சைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்காமல் 4 மணி நேரத்துக்கும் மேலாக நள்ளிரவில் காக்க வைத்துள்ளனர். இதற்கிடையே அவர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கும் அனுமதி மறுக்கப்பட்டதால், மீண்டும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணவேணியின் மகன் ரித்திஸ் கூறுகையில், 'அம்மாவிற்கு கரோனா நோய்த்தொற்று குணம் ஆகாமலேயே குணமடைந்துவிட்டதாக சொல்லி, வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருக்கு சர்க்கரை நோயும் உள்ளது, இதற்கிடையே மூச்சுத்திணறல் பிரச்னையும் இரவு ஏற்பட்டது.
சிகிச்சைக்காக பல்வேறு தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் சென்ற போது இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்துச்செல்லுங்கள் என்று அறிவுறுத்தினர்.
இதனால் நள்ளிரவு நேரத்தில் மாநகர் முழுவதும் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் மீண்டும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சேர்க்க காவல் துறையை அணுகிய பின்னர் இன்று (ஆகஸ்ட் 14) அதிகாலை நான்கு மணிக்கு சிகிச்சைக்காக மீண்டும் அங்கு சேர்த்துள்ளனர். இதுபோல சம்பவங்கள் நடைபெறாத வகையில் சம்பந்தபட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.