கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 25) மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை (ஜூலை 27) காலை 6 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்திருந்தார்.
அதன்படி, நேற்று (ஜூலை 25) மாலை 5 மணிமுதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்குவந்தது. இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் சூலூர் வட்டாட்சியர் மீனாகுமாரி தலைமையில், காவல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி அவசியமில்லாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், கரோனா தொற்று பரவல் குறித்து பொதுமக்களிடம் அரசு அலுவலர்கள் எடுத்துரைத்தனர். மீண்டும் பிடிபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க:கோவையில் முழு ஊரடங்கு தொடங்கியதால் சாலையில் கூட்ட நெரிசல்!