கோவை பேரூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் கல்விக் கட்டணத்தை உயர்த்தியதாகவும் அதை கட்ட முடியாத மாணவ மாணவிகளுக்கு அதிக அபராதம் விதிப்பதாகவும், கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
மனு அளிக்க வந்தவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து தீர்வு கிடைக்கும் வரை செல்லமாட்டோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கல்லூரியின் மாணவி கல்விக் கட்டணத்தை செலுத்த அவகாசம் கேட்பவர்களுக்கு அதிக அபராதம் விதிப்பதாகவும் கல்விக் கட்டணத்தை விட அபராதத் தொகை அதிகமாக உள்ளதென்றும் தெரிவித்தார்.
இதை கண்டித்து மூன்று நாள்களாக கல்லூரியின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் வட்டாட்சியரைச் சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மேலும் இன்று தேர்வெழுத சென்ற எந்த மாணவரையும் அனுமதிக்கவில்லை என்று கூறினார்.
கல்லூரி நிர்வாகத்தின் இந்த போக்கிற்கு மாவட்ட ஆட்சியர் ஒரு தீர்வளிக்க வேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.