கோவை ரத்தினபுரி, சுப்பாத்தாள் லே-அவுட்டைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மனைவி சுப்ரியா, இவர்களது மகன் ராம்குமார் (18) கல்லூரியில் படித்து வந்தார். இவர் கடந்த 8ஆம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் சத்தியமங்கலம் சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது, கணபதி பகுதியில் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு பலத்த காயத்துக்கு ஆளானார்.
உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் நேற்று அவர் மூளைச் சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள், ராம்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அவரது இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல், எலும்பு ஆகியவை தானமாக வழங்கப்பட்டது.
கல்லீரல், ஒரு சிறுநீரகம் அவர் சிகிச்சைபெற்ற மருத்துவமனைக்கும், கண்கள், தோல், எலும்பு, ஒரு சிறுநீரகம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம், நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு, தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் எழுத்து: தன்னம்பிக்கை மாணவி தனுவர்ஷா!