கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து கடந்த முப்பது ஆண்டுகளாக டீசல் எஞ்சின் மூலம் தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு மின்சார எஞ்சின் மூலம் இயங்கும் ரயிலாக மாற்றப்பட்டதை அடுத்து இதில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. பயணிகளின் வசதிக்காக அவர்களின் கோரிக்கையை ஏற்று மெமோ ரயில் போக்குவரத்தினை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கபட்டது. கோரிக்கை பரிசீலித்த ரயில்வேத்துறை இப்பகுதிக்கு மெமோ ரயில் சேவையை தொடங்க அனுமதியளித்தது.
அதனைத்தொடர்ந்து, கடந்த முப்பது ஆண்டுகளாக இயக்கபட்ட இந்த பயணிகள் ரயில் சேவை நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்று முதல் கோவை - மேட்டுப்பாளையம் இடையே புதிய மெமோ ரயில் சேவை தொடங்கபட்டுள்ளது. இன்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இந்த ரயிலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 8.30 மணிக்கு முதல் ரயில் சேவையை மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேலாளர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மெமோ ரயில் கோவை புறப்பட்டுச் சென்றது.
புதிய மெமோ ரயலின் சிறப்பம்சங்கள்
சென்னை ஜ.சி.எப் ரயில்வே தொழிற்சாலையில் தயாரிக்கபட்ட இந்த அதிநவீன ரயிலில் இரண்டு பக்கமும் எஞ்சின் உள்ளது. எட்டு பெட்டிகள் கொண்ட இந்த ரயில் 614 பேர் இருக்கையில் அமர்ந்தும் 1781 பேர் நின்று கொண்டும் ஒரே சமயத்தில் இரண்டாயிரத்து 600 பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புக்காக 32 கண்கானிப்பு கேமராக்களும் பொறுத்தபட்டுள்ளன.
கோவை-மேட்டுப்பாளையம் இடையே புதிய மெமோ ரயில்சேவை தொடங்கியதை பயணிகள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இதையும் படிக்க: கனமழை எதிரொலியால் நீலகிரியில் ரயில்கள் ரத்து!