கோவை தடாகம் சாலை கே.என்.ஜி புதூர் பகுதியைச் சேர்ந்த மேஜிக் மகா என்பவரது மகன் சந்தோஷ்குமார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார். சந்தோஷ்குமார் வேவ் போர்டு ஓட்டியபடியே ஜக்ளிங் செய்து சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அங்கீகரித்து உள்ளது.
இதுகுறித்து மாணவர் சந்தோஷ்குமார் கூறுகையில், "எனது தந்தை ஜக்ளிங் செய்வதை பார்த்தே எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கில் கரோனா காலகட்டத்தில் கூட தீவிர பயிற்சி மேற்கொண்டேன்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு அடி தூரத்தில், 25 கோன்கள் 50 அடி தூரத்தை ஒரு நிமிடத்தில் 150 முறை ஜக்ளிங் செய்தது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. 25 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இது தற்போது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்று இருக்கிறது. இதற்கான சான்றிதழ் தற்போது கிடைத்துள்ளது.
தற்போது நான்கு பந்துகள் கொண்டு வேவ் போர்டில் ஜக்ளிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஒரு நிமிடத்தில் 50 கோன்களை கடக்க முயற்சி செய்துவருகிறேன். மூன்று மாதத்தில் இதனை செய்து புதிய சாதனை படைக்க முயற்சி செய்துவருகிறேன்” என்றார்.