பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கோயம்புத்தூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கமல் ஹாசனை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து இன்று (மே.3) காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள துணைத் தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள். ஆட்சி அமைக்க போகும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.
புதிதாக அமைய இருக்கின்ற அரசு ஆக்கப்பூர்வமான வகையில், மக்கள் பணிகள் மேற்கொள்ளவும் தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசின் உதவிகளை பெற்று தர நாங்கள் உறுதுணையாக இருப்போம். எங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ள அறிவிப்பை நிறைவேற்ற மத்திய - மாநில அரசுகளின் துணையோடு செயல்படுவோம் என்றார்.