கோயம்புத்தூர்: உக்கடம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்றுவந்த மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் (நவ.11) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
விசாரணையில், அந்த மாணவி ஆசிரியரால் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உள்ளாகியதாகவும் பள்ளி நிர்வாகத்திடம் இதனைப் பற்றி புகார் தெரிவித்தும்கூட அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரியவந்துள்ளது.
மிதுன் சக்கரவர்த்தி கைது
இதனையடுத்து (நவ.12) மாலை அந்த ஆசிரியர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், போக்சோ சட்டத்தில் இரண்டு பிரிவுகள் என மொத்தம் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து பின்னர் சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தனியார் பள்ளியின் முதல்வர் மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில், தனிப்படை காவல் துறையினர் பெங்களூருவில் வைத்து நவம்பர் 14 ஆம் தேதி அவரைக் கைதுசெய்தனர்.
மீரா ஜாக்சன் சிறையில் அடைப்பு
இதனையடுத்து கோவை மகளிர் நீதிமன்றம் நீதிபதி நந்தினி தேவி முன்பு முன்னிறுத்தப்பட்ட முதல்வரை வரும் 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் அவர் கோவை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மாணவி தற்கொலை செய்த வழக்கில், மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள உண்மை தன்மையை அறிய, தடயவியல் சோதனைக்கு அனுப்ப காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தொடரும் பாலியல் சீண்டல் தற்கொலைகள்: நம் சமூகம் எங்கு தவறிழைக்கிறது?