கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் முன்னாள் பேரூராட்சி தலைவரான தெப்பீஸ்வரன் என்பவர் கடந்த மார்ச் 25ஆம் தேதி கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதிமுக பிரமுகரான இவர் கொடுத்த புகாரில், மறைந்த சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மரணம் குறித்தும், அதில் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் "செய்தி புயல்" என்ற பத்திரிகை ஒன்றில் பெளர்ணமி நிலவன் என்பவர் அவதூறு செய்தி வெளியிட்டதாகவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த புகாரை பெற்றுக்கொண்ட கருமத்தம்பட்டி காவல் துறையினர் இது தொடர்பாக மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர், பெளர்ணமி நிலவனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், கூட்டுச்சதி, அவதூறு பரப்புதல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இவருடன் சிவகுமார், ராமசாமி ஆகியோர் சேர்ந்து தெப்பீஸ்வரனை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டதாகவும் அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகுமார் ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் கோவை மத்திய சிறையில் உள்ளதால் மற்றொரு நபரான ராமசாமி என்பவரை காவல் துறையினஎர் தற்போது தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சூலூர் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் காலமானார்!