கரோனா வைரஸ் பரவுவதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் பலரும் அத்தியாவசிய தேவைக்காக வருவதாகக்கூறி சாலைகளில் சுற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு காவல் துறையினரும் பல்வேறு தண்டனைகளையும், அபராதங்களையும் விதிக்கின்றனர். சிலர் மீது வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் வெளியில் வருவது குறைந்தபாடில்லை, எனவே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை காவல் துறையினர், சமூக ஆர்வலர்கள் இணைந்து கோவை மாநகராட்சி ஓவியர்கள் சங்கத்தினர் மூலம் கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர் போன்ற முக்கிய இடங்களில் சாலைகளில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கரோனா ஓவியத்தை வரைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னையை அடுத்து கோவையில்தான் அதிகப்படியான மக்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் வெளியே சுற்றுவதால் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கரோனா: சொந்த செலவில் ஓவியம் வரைந்த இளைஞர்!