கோயம்புத்தூர்: கோவையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்ததையடுத்து போலீசார் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் ஆயுதங்கள் வைத்திருந்தவர்கள், சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களுடன் வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் பதிவிட்டவர்களையும் கண்காணித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தனர்.
அந்தவகையில் கோவையில் வசித்து வந்த, இளம்பெண் தமன்னா என்கிற வினோதினி கையில் ஆயுதங்களுடன், வாயில் சிகரெட்டுடன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.
இதனை அறிந்த கோவை மாநகர காவல் துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி அந்த இளம்பெண்ணைத் தேடி வந்தனர். இதனையறிந்த தமன்னா தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் தமன்னா தன்னுடைய வலைத்தள பக்கத்தில், பட்டா கத்தியுடன் இருக்கும் வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது.
தற்போது இது மாதிரியான வீடியோக்கள் எதுவும் நான் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே கஞ்சா வழக்கில் உள்ளே சென்று வந்துள்ளேன். தற்போது எனக்கு திருமணமாகி ஆறு மாத கர்ப்பிணியாக எனது கணவருடன் வாழ்ந்து வருகிறேன். நான் தற்போது எந்த ஒரு வீடியோக்களும் பதிவேற்றம் செய்யவில்லை. எனது வலைதளப் பக்கங்களை ஆய்வு செய்தால் உங்களுக்குத் தெரியும். நான் செய்த தவறுகளை மறந்து எனது கணவருடன் வாழ்ந்து வருகிறேன் என தன்னிலை விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் அந்த இளம்பெண் தமன்னா என்கிற வினோதினி சங்ககிரி பகுதியில் இருப்பதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அங்குச் சென்ற கோவை மாநகர போலீசார் தமன்னாவைப் பிடித்து கோவைக்கு அழைத்து வந்து பீளமேடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது அவரது நிலை கருதியும், தற்போது அவர் அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை என்பதாலும் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது விசாரணைக்குப் பின்னர் தான் தெரியவரும்.
இதையும் படிங்க: மதுபோதையில் தாயை கற்பழித்து கொலை செய்த மகன் கைது!