கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் வனச்சரகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைத்துள்ளது. கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு யானைகள் வலசை செல்லும் முக்கிய யானை வழித்தடமாக மேட்டுப்பாளையம் கல்லாறு வனப்பகுதி உள்ளது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் வனச்சரகத்திலும் அருகே பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதி உள்ளதால் சிறுமுகை வனச்சரகத்திலும் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். நீர்பிடிப்பு பகுதி
கோடைக்காலங்களில் நூற்றுக்கணக்கான யானைகள் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் காணப்படும். இந்த நிலையில், இவ்வாறு சிறுமுகை வனப்பகுதிக்கு 7 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஆண் காட்டு யானை ஒன்று சிறுமுகை வனப்பகுதியிலேயே தங்கியது. அங்கிருந்து மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு அடிக்கடி வந்து சென்றது.
யானையின் ஆஜானுபாகுவான உடல் அமைப்பு, நீண்ட தந்தம் இவற்றை பார்த்த அப்பகுதி மக்கள், அந்த ஆண் காட்டு யானைக்கு 'பாகுபலி' (Bahubali Elephant) என பெயரிட்டு அழைத்து வந்தனர். இந்த நிலையில், விவசாய பயிர்களை இந்த யானைத் தொடர்ந்து சேதப்படுத்தியதால் அந்த யானையை இடமாற்றம் செய்ய வேண்டும் என மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, ரேடியோ காலர் பொறுத்தி கண்காணிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அத்திட்டம் தோல்வி அடைந்ததால் அதனை கைவிட்டனர். இதைத்தொடர்ந்து பாகுபலி யானையானது மாலை நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய வன ஆர்வலர் சரவணன், “இந்த யானை நாள்தோறும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும்போது, மேட்டுப்பாளையம் - ஊட்டி நெடுஞ்சாலையை கடந்தும் விவசாய தோட்டங்களில் உன்ன மின் வேலியை உடைத்துக் கொண்டும் செல்வதால் பாகுபலி யானைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து விவசாய நிலங்களுக்குள் இந்த யானைப் புகும்போது, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மின்வேலியை சர்வ சாதாரணமாக உடைத்துக் கொண்டு செல்கிறது. அதுபோல், மின் கம்பங்களையும் உடைத்து விடுவதால் மின்சாரம் தாக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.
இது தவிர, விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்த பயிர்களை யானை உட்கொள்வதால் அதற்கு உடல் உபாதைகளும் ஏற்படும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக, குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வரும் பாகுபலி யானையின் இடது கண் பார்வையில் முற்றிலும் குறைபாடு உள்ளது.
மேலும், பாகுபலி யானையை கற்களை வீசியும் வெடிகளை வீசியும் விரட்டுவதால் அதன் உடலில் காயங்களும் ஏற்பட்டு உள்ளன. மேலும் வெடிகள் வெடித்து அதன் உடலில் பால்ரஸ் குண்டுகளும் உள்ளதாக கூறப்படுகின்றன. இந்த நிலையில், இந்த பாகுபலி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து யானையின் உடலில் உள்ள பால்ரஸ் குண்டுகளை அகற்றி, அதன் பார்வை குறைபாட்டிற்கும் சிகிச்சை அளித்து காப்பாற்றுவதற்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தேக்கம்பட்டி விவசாயி செல்வராஜ் கூறுகையில், “இத்தனை ஆண்டுகளாக யானை தொல்லை பெரிதாக இருந்ததில்லை. பாகுபலி யானை ஊருக்குள் வர துவங்கியது முதல் 7 ஆண்டுகளாக பெரும் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறோம். மின் வேலியை சர்வ சாதாரணமாக உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து மூன்று அல்லது நான்கு மணி நேரம் விவசாய பயிர்களை உண்கிறது.
நாள் ஒன்றுக்கு சுமார் 800 வாழைகளை சேதப்படுத்துகிறது. இதனால் தாங்கள் விவசாயத்தை கைவிடும் நிலை உள்ளது. எனவே உடனடியாக இந்த யானையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், அல்லது அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்” என கோவை மாவட்ட வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: “அரிக்கொம்பனை பிடித்த அரிசி ராஜா” ஒரு ரவுடி போலீஸ் ஆன கதை!