'போடு வெடிய...'; டாஸ்மாக் கடை திறப்பைக் கொண்டாடி தீர்த்த கோவையன்ஸ்! - கோயம்புத்தூர் அண்மைச் செய்திகள்
கோவையில் ஊரடங்குத் தளர்வுகள் காரணமாக, நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று (ஜூலை 5) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு, மதுபிரியர்கள் பலர் கடை வாசலில் பட்டாசு வெடித்து, தேங்காய் உடைத்து கொண்டாடினர்.
கோவை: கரோனா தொற்றுப் பரவல் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக, தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இயங்கி வந்தன.
இந்நிலையில் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையொட்டி, நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று (ஜூலை 5) டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன.
இதனால் கோவையில் உள்ள டாஸ்மாக் கடைகளின் முன்புறம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தனிமனித இடைவெளிக்காக வட்டங்கள் போடப்பட்டன. மதுபிரியர்கள் காலை முதலே குவியத் தொடங்கியதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் சுங்கம் - உக்கடம் பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்க வந்த மது பிரியர்கள் பலர், பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதேபோன்று புலியகுளம் டாஸ்மாக் கடைக்கு வந்த மதுபிரியர்கள், கடை வாசலில் தேங்காய் உடைத்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறப்பைக் கொண்டாடி தீர்த்த கோவை 'குடி'மகன்களின் செயல் தற்போது இணைய உலகை கலக்கி வருகிறது.
இதையும் படிங்க: மதுப்பிரியர்கள் மீதுதான் அரசுக்கு அக்கறையா - சமூக ஆர்வலர்கள் வேதனை