கோயம்புத்தூர் பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது வாடகை வீட்டில் வசித்துவருபவர் சீனிவாசன். இந்நிலையில், சீனிவாசனின் உறவினரை பாலசுந்தரம் வளர்த்துவந்த நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் வடமாநில நபர் ஒருவரை அழைத்துவந்து நாயை அங்கிருந்த மரத்தில் கட்டிவைத்து அடித்துக் கொன்றுள்ளார்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் விலங்குகள் நல வாரிய மாவட்ட அலுவலர் பிரதீப் பிரபாகரனிடம் தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பிரபாகரன் அங்கு நடந்த நிகழ்வை பார்த்து சீனிவாசன், அவருக்கு உதவிய வடமாநில நபர் ஆகிய இருவர் மீதும் பீளமேடு காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
காவல் துறையினர் விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், விலங்குகளை வதை செய்தல் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அதே சமயம் நாய்களை வளர்ப்பவர்கள் நாயை வீட்டிற்குள் வைத்து வளர்க்கும் படியும் தெருவில்விட வேண்டாம் என்றும் காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர்.