கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, சில தளர்வுகளுடன் மே 17ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொது போக்குவரத்து முடக்கப்பட்டதால் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
இந்தப் பிரச்னையை தீர்க்கும் விதமாக, பிற மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், இதற்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கோவையில் பணிபுரிந்துவந்த பீகார், அசாம், உத்தரப் பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்வதற்காக திடீரென கோவை ரயில் நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
இதன் காரணமாக, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட துடியலூர் காவல் துறையினர், அவர்கள் அனைவரையும் ஒரு பகுதியில் ஒன்றிணைத்து, உரிய அனுமதி பெற்றிருந்தவர்களை மட்டும் ரயிலில் அனுப்பி வைப்பதாகக் கூறினர், மேலும் அனுமதி பெறாத நபர்களுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பித்தவுடன் ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதியளித்தனர்.
இதையும் பார்க்க: 'அழாத நான் தூங்கனும்' - 8 மாத குழந்தையைக் கொலைசெய்த தந்தை!